நெஞ்சு நிறைய
பாலைத் தெய்வம்
காதலெனும் சோலையிலே
பாவை நோன்பு
அடியும் முடியும் தேடி!

இந்த அமர்களத்தில் கிராமப் புரத்திலிருந்து வரும் என் வண்டி அடி படாமல் தப்பியது இறைவன் புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் போகும் வேகத்தில் போனால் வீதியைக் கண்டு பிடிக்க முடியாது. வீதி பார்த்து ஓட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம். வலதா, இடதா என தீர்மானம் செய்ய முடியாமல் தவிக்கும் பொழுதில் பின்னால் வரும் காரின் ஹாரன் ஒலிக்கும். அவன் பல்லை நற, நறப்பது அதில் ஒலிக்கும். மெர்க்காட்டர் ஸ்ட்டாரஸ (சாலை) எங்கு என்று தெரியவில்லை. இந்தப் பகுதியென்று தெரிகிறது. அடுத்த சந்தா, அதற்கடுத்த சந்தாவென வரைபடத்தில் பார்க்க குனிந்தால் பின்னாலிருந்து திட்டு வரும். குத்து மதிப்பாய் ஒரு தெருவில் நுழைந்து விட்டு நிமிரும் பொதுதான் அது ஒரு வழிச்சாலையென தெரிந்தது. பெரிய தெருவுக்கு மீண்டும் திரும்ப முடியாது. மோதாத குறையாக எதிரே ஒரு ட்ரெக் வந்தது. அதன் சன்னல் வழியாக அசிங்கமாகத் திட்டினான் ஓட்டுனன். உங்களைப் போன்ற பரதேசிகளால்தான் தெருவின் ஒழுங்கே போய்விட்டது எனச் சொல்லி முறைத்தான். "அது, அப்படி அல்ல ஐயா! நான் வெளியூர் காரன், நான் தேடும் தெரு கிட்ட எங்கேயோ இருக்கிறது. இதுவா, அடுத்ததாவெனத் தெரியவில்லை, கொஞ்சம் சொல்ல முடியுமா?"என சாவதானமாகக் கேட்டு அவனை சமனப்படுத்த ஒன்று பாஷை தெளிவு இல்லை, இரண்டு அவன் நம்ம ஊர் ஆளுமில்லை.
இந்த தெரு கடக்கும் வரை இந்த இழுபறிதான். போலிஸ் கையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். வீட்டின் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வம்பு, தும்புக்கு அலையும் கிழடு கட்டைகளுக்கு இது உவப்பான காரியமாகப் படலாம். ஆசையுடன் அவர்கள் 001 கூப்பிட்டு காவல்காரரே இந்த தெருவில் ஒரு வெளி நாட்டுக்காரன் ஒரு வழிப் பாதையென அறிந்தும் எதிர் புறத்தில் ஓட்டி பெரிய களேபரம் செய்கிறான், வந்து பிடித்துக் கொண்டு போங்கள், நம்ம நாட்டுக்கு புண்ணியாமாய் போகும் என்று ஒழுங்கு கட்டுப்பாட்டை நிறுவ உதவலாம். பத்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்கும் போதும் கூட, கண் பார்வை மங்கிய வயதான காலத்தில் கூட, நம் கூடவே பொறந்த கருப்பத்தூர் கருப்பு காட்டிக் கொடுத்து விடுகிறது!
காவல் துறைக்கு தெண்டம் அழாமல், பாட்டி சாபம் ஏதும் இல்லாமல் தெருவைக் கடந்து பெரு மூச்சொன்று விட்டு காரை நிறுத்த இடம் தேடும் போதுதான் பளிங்குக் கை வெளியே தொங்க இளம் சிட்டு ஒன்று தனது
சரியாக, அவள் வீட்டு முன் நின்றிருந்தது என் கார்! கொஞ்சம் பழைய கோட்டை கொத்தளங்களை நினைவுபடுத்தும் கட்டடிம். கதவருகில் இருந்த கூவு பொத்தானை அழுத்தினேன். யார்? என்ற கேள்விக்கு "நான்"என்று பதில் சொன்னேன். வருவேன் என்று சொல்லியிருந்தேன், அதனால் அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் நடையில் கால் சத்தம் கேட்க வந்து கதவு திறுந்தாள். ஒரு பெரிய முற்றத்தில் நின்றிருந்தோம். நாலா பக்கமும் உயர் வீடுகள். இந்த புறாக் கூண்டுகளுள் எங்கோ என்னை அழைத்துச் செல்லப் போகிறாள்.
கொஞ்சம் உரிமையுடன் அவளை கட்டிக் கொள்ள குனிந்தேன். அவள் கையைக் குலுக்கினாள். ஒரு வருடம் ஆகிவிட்டது பார்த்து. இடையில் ஓரிரு முறை பேசியதுதான். அன்னியோன்யம் வர மீண்டும், மீண்டும் பழக வேண்டி இருப்பது அலுப்பு தந்தது. சிரித்துக் கொண்டு "செளக்கியமா?" வென கேட்டேன். "செளக்கியம்தான், நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்பம் நலம்தானே?" என்றாள்.
எனக்கு பாதி உயரம்தான் இருந்தாள். இந்த ஜெர்மானியருள் பனை உயரத்திலிருந்து, பருத்திச் செடி உயரம்வரை பல தினுசுகள் இருக்கின்றன. எதிர்க்க வருபவரை நாலு அடி முன்னாலேயே நின்று பேச வைக்கும் பருத்த, குத்தீட்டி முலைகளிலிருந்து, பூதத்கண்ணாடி போட்டு தேட வைக்கும் மார்பகம் உடைய மங்கையர்வரை பல தினுசுகள் இங்கு உண்டு. பொதுவாய் பனங்கிழங்கு பிளந்தது போன்ற மெல்லிய உதடுகள்தான் அதிகம் என்றாலும், ஆப்பிரிக்க தடித்த உதடுகளும் கண்ணில் படுவதுண்டு. செங்கிஸ்கான் விட்டுச் சென்றிருக்கும் மங்கோலிய முகங்கள் லேசாய் தலைகாட்டுவதுமுண்டு. டயானா மாதிரி சில பேர், மர்லின் மன்றோ போல் சில பேர், ஜேனட் ஜாக்சன் போல் சிலபேர், நம்மவூர் கருப்பாயி போலும் சில பேர். இந்த வெள்ளை நிறம் இல்லையென்றால் இவர்களை இந்தியாவிற்கு கூட்டிச் சென்று தாராளமாய் பரிசம் போடலாம்.
பனிக்காலத்தில் முகம் ஏகமாய் வெளுத்துவிடுகிறது. உள்ளே ஓடும் ரத்தநாளங்களின் வெள்ளை அணு, சிவப்பு அணுக்களை பார்க்கும் அளவுக்கு தோல் வெளிறிப் போய் விடுகிறது. கோடை காலத்தில்தான் சில முகங்களை பயப்படாமல் பார்க்க முடிகிறது. தோல் கொஞ்சம் கருத்து, மாநிறம் வந்து பார்க்க லட்சணமாக இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த பன்னிக் கொழுப்பு கன்னத்தில் வந்து நின்று பளிங்குச் சிலையென்ற வழு வழுப்பை கொடுக்கிறது. மஞ்சள் தடவி மெருகேரிய நம்ம பெண்களின் கன்னத்து மென்மை, இதம், அழகு கொஞ்சம் குறைகிறது.
அவள் என்னை பார்த்து அன்பாக சிரித்தாள். "வீடு எளிதாக கண்டுபிடித்தாயா?" எனக் கேட்டாள். லாரிக்காரன் திட்டியதையெல்லாம் சொல்லவா முடியும்? சிரித்துக் கொண்டேன். இவள் கன்னமும் கொஞ்சம் வித்தியாசமானது. பளிங்குத் தரையில் சிதறிய கருமணிகள் போல் இவள் கன்னத்தில் சின்ன மெல்லிய கரும்புள்ளிகள். இவள் சிரிக்கும் போது அவைகளும் கூடச்சிரிக்கின்றன. இவள் உயரத்திற்கு இவளுக்கு பெருத்த மார்புகள்தான். இவள் கோடை காலத்தில் வெறும் பனியனுடன், மார்புக் கச்சை இல்லாமல் நடமாடும் போது மார்பு குலுங்கல் மற்றவரை மயங்க வைக்கும்தான்.
மலை நாட்டில் ஒரு கருத்தரங்கிற்கு போயிருந்த போதுதான் அவளை முதலில் பார்த்தேன். அதுவும் ஒரு கோடைதான். இவளைவிட இவள் பெண் அழகு. சின்னச் சின்ன மழழை ஜெர்மன் பேசி முதலில் என்னை மயக்கியது அந்தச் சிட்டுதான். அவள் மூலமாக அவள் அம்மாவை அறிந்து கொண்டேன். அடுத்த நாள் இவளது தோழனை அறிந்து கொண்டேன். இரண்டு பேரும் நாலு வருடங்களாக சேர்ந்து வாழ்கிறார்களாம். நட்பின் பரிசாக ஒரு சின்ன சிட்டு வேறு!
இவளிடம் உள்ள கவர்ச்சியை நாங்கள் சேர்ந்து ஒரு பொய்கைக்கு குளிக்க போன போதுதான் கண்டு கொண்டேன். இவள் தோழன் வரவில்லை. பனி உருகிய நீரிலான பொய்கை அது. கொஞ்சம் நீலம் பாரித்த பளுப்பு நிறம். அடி மண் ஒரே களி. தரையில் காலை வைத்து இறங்கிக் குளிக்க யோசிக்க வைக்கும் பொய்கை. பொதுவாய் யாரும் குளிப்பதில்லை போலிருக்கிறது. ஒரே ஒரு பழைய படகு. அது நிற்க ஒரு சின்ன மரத்துறை அவ்வளவுதான். வருபவர்கள் சித்திரான்னங்களுடன் சுற்றி உட்கார்ந்து கொண்டு ஆல்ப்ஸ் மலை அழகை ரசிக்கும் இடம் அது. எங்களுக்குத்தான் குளிக்க வேண்டும் என்று தோன்றியது. உடம்பின் சூடு அப்படி. குழைந்தைகள் எங்களுக்கு முன் நீரில் தாவி விட்டன. நீந்தத் தெரியாத குழந்தைகள் ஓடத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது ஓட்டமாட்டார்களாவென ஏக்கத்துடன் காத்து நின்றன. எனக்கு பாவமென்றாகிவிட்டது. "சரி, வாங்கடா! பசங்கள" என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு படகில் ஏறினேன். குழந்தைகள் படகு சவாரிக்கு தயாராகின. துடுப்பு எங்கே, எங்கே என்று தேடினால் எங்கும் காணவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு யாரும் அங்தப் படகை உபயோகித்ததில்லை என்பது போல் எனக்குப் பட்டது! சரி கையைத் துடுப்பாக்கி தள்ளுவோமென படகு சவாரி மெல்லத் தொடங்கியது. அப்போதுதான் அவள் நாங்கள் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு நீரில் தாவினாள்.
கொஞ்ச நேரத்தில் படகின் வேகம் கூடியது. குழந்தைகளின் குதூகலமும் கூடியது. மச்ச கன்னிபோல் இவள் நீந்திக் கொண்டே படகை லாவகமாக தள்ளினாள். அந்த நீல நீரின் பின்னனியில் அவள் உடம்பு பளபளத்தது. மார்பில் மச்சம் இருப்பது கூட எடுப்பாய் தெரிந்தது. மார்புகள் கஷ்டப்பட்டு நீருடையில் கட்டுப் பட்டு இருந்தன. இதுதான் ஜலக்கீரிடையின் ஆனந்தம் என்று அன்றுதான் புரிந்தது.
நாலு மாடி ஏற வேண்டியிருந்தது. சின்ன வீடு. கதவின் மேற்கே ஒரு சமயலறை. அடுத்து கழிப்பறை. பின் ஒரு ரேழி, அதையடுத்து பெரிய அறை. பெரிய அறை முழுவதும் சின்னப் பெண்ணிற்காக விட்டிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. பெரிய அறை பெரும்பாலும் விருந்தினர் அறையாக இருக்கும். எல்லா ஜெர்மன் வீடுகளிலும் இவ்வறை மகா சுத்தமாக ஒழுங்கு படுத்தப் பட்டு, ஸ்டீரியோ, பெரிய டிவி போன்ற களிப்பு வசதிகள் நிறைந்து இருக்கும். பொதுவாக அது பெரியவர்களுக்கான அறை. குழந்தைக்கான அறை தனியாக இருக்கும். அதில் குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் பரந்து கிடக்க, ஒழுங்கற்று இருக்கும். இவள் வீட்டில் பெரியவர் அறை அப்படி காட்சி அளித்தது. பெரிய டிவி இல்லை. ஸ்டீரியோ கூட இல்லை. மிக எளிமையாக இருந்தது. இவளுக்கு அவ்வளவு அதிகமாக நண்பர்கள், விருந்தினர் போக்குவரத்து இல்லையென்பதை அது காட்டியது. இவள் பெரிய சொத்து இவள் பெண்தான் என்று உடனே புரிந்தது. இவள் வாழ்வு அச்சின்னச் சிட்டைச் சுற்றி அமைந்திருப்பது அந்த அறையைப் பார்த்தாலே புரிந்தது.
"மன்னித்துக் கொள்! அதிகம் ஒழுங்கு பண்ண நேரம் இல்லை. வேலைக்கு போய் கொண்டு குழந்தையுடன் தனியாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியமல்ல" என்றாள். என் முகத்தில் நின்ற கேள்வியைப் புரிந்து கொண்டு அவளே பதில் சொன்னாள், "இவள் அப்பா இப்போது ஒரு போலந்து பெண்ணோடு வாழ்கிறான். இந்த ஊரில்தான் இருக்கிறான். நீ வருகிறாய் என்று சொன்னவுடன் அவனும் உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறான்" என்றாள். இவள் ஏன் நான் வருவதை அவனுக்கு சொல்ல வேண்டும்? ஒரு தற்காப்புக்கா? அவன் ஏன் உடனே என்னைப் பார்க்க வரவேண்டும்? தன் பழைய உரிமையில் சொந்தம் கொண்டாட வருகிறானா? பொறாமையா? இல்லை அவனுக்கு பொறாமை வரவேண்டுமென்று இவள் அப்படிச் சொன்னாளா? அப்படியானால் அவனும் வந்து இரவு தங்கப் போகிறானா? என்னுடன் சண்டைக்கு வருவானா? சண்டை போட என்ன இருக்கிறது? அவனுக்குத்தான் இன்னொரு பெண் கிடைத்துவிட்டாளே. இவளைத் தனியாக, அவள் இஷ்டப் படி வாழ விட வேண்டியதுதானே? அடக்கடவுளே, குழப்பமில்லாமல் நல்ல படியாய் இந்த இரவு கழிய வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
நீண்ட மெளனத்தைக் கலைக்க, "குழந்தை, கின்டர் கார்டன் போகிறதா?" என்றேன். "ஆம்! அவளை காலையில் விட்டு விட்டு நான் ஆஸ்பத்திரி போய் விடுவேன், மீண்டும் மதியம் அவளை கூட்டிக் கொண்டு வந்து விடுவேன். பிறகு, அவளுடன் விளையாடி, அவளுக்கு உணவு கொடுத்து, தூங்கப் பண்ணி...." என்று முடிக்காமல் சிரித்தாள். குழந்தையுடன், குழந்தையாகிப் போயிருப்பது அவளது சிரிப்பில் தெரிந்தது. "அவசர உதவி வேண்டுமெனில் இவள் அப்பா, வந்து பார்த்துக் கொள்வான். உள்ளூரில் இருப்பதால் ஒரு செளகர்யம்" என்றாள். இந்தப் பிரிதல் இவள் குழந்தை மனதை பாதிக்கவில்லை போல் அப்போதைக்குப் பட்டது.
இவள் பெரிய அழகி அல்ல. ஜெர்மானிய பெண்ணழகை ஒப்பு நோக்கினால் இவள் சாதாரண அழகுதான். அனால் இவளிடம் ஒரு வெகுளித்தனம் இருக்கிறது. அதுதான் அவள் பலம்.
இரவு விருந்திற்கு இவள் பழைய நண்பன் வருவதாய் ஏற்பாடு. இன்னும் சில மணி நேரங்கள்தான் இவர்களுடன் தனியாய் கழிக்க. இவள் பெண் தனது புத்தகங்களையெல்லாம் எடுத்துக் காட்டியது. மீனைப் பற்றிய புத்தகம், கழுதையைப் பற்றி, டைனசோர் பற்றி, பூமி பற்றி..இப்படி பல வண்ணப் புத்தகங்கள். இதற்கிடையில் பிரபல குழுந்தை எழுத்தாளர் யானோஷ் எழுதிய மானுட உடலுறவு பற்றிய புத்தகம் ஒன்று! ஐந்து வயது பெண்ணிற்கு தாம்பத்திய இரகசியங்களைப் பற்றி எளிமையாய் சொல்லித்தரும் புத்தகம். யானோஷ் மானுட காதலை ஒரு கோழிக் குஞ்சின் பார்வையில் சொல்லிச் செல்கிறார்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குழந்தையாய் இருக்கும் போதே கழுதை, நாய், பன்னி இவை உறவு கொள்ளும் முறைகளைப் பார்த்து அரை குறையாய் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நாயின் சேர்க்கையை தெருவில் பார்த்துவிட்டு தாயிடம் கேட்கிறது ஒரு இந்தியக் குழந்தை. "அம்மா! இதுக்கு அர்த்தம் என்ன?" என்று? பதில் இப்படி வருகிறது. "சேய்! இந்த அசிங்கத்தையெல்லாம் பார்த்தாயா? வாயை மூடு!" ஒரு இந்தியக் குழந்தை "அசிங்கத்தில் பிறக்கிறது" என்ற ஞானம் இளமையிலே கிடைத்துவிடுகிறது! இல்லாவிடில் பெரும்பாலான வீடுகளில் குழந்தையை தவிட்டிற்கு வாங்கியதாகச் சொல்லி, தாய்-தந்தையரின் அன்ப்¢ன் அடையாளமாகப் பிறந்த ஒரு செல்வத்தை கேவலம் தவிட்டிற்கு வாங்கியதாகச் சொல்லி உண்மை எது, அன்பு எது என்று எதுவும் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பிப் போடுவார்கள்! பெரிய ஐரோப்பிய நகரங்களில் வாழும் குழுந்தைகளுக்கு நாயின் சேர்க்கையைப் பார்த்து கேள்வி கேட்கும் வாய்ப்புகள் இல்லை. எனவே இவைகளை பாடம் போல் சொல்லித் தர இச்சமூகம் அனுமதிக்கிறது.
இருவரும் சேர்ந்து அப்புத்தகத்தைப் புரட்டினோம். ஆணும், பெண்ணும் சேரும் படம் ஒன்று. எனக்குத்தான் வெட்கமாக இருந்தது. குழந்தை இயல்பாய் பார்த்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் கொஞ்சம் வெட்கமும், ஒரு சிறு புரிதலும் கொண்டு என்னை அவள் பார்த்த பார்வையில் நான் ஆண், அவள் பெண் என்பதை சிறு விநாடி உணர்ந்தேன். இவள் வயது என்ன? என் வயது என்ன? மை, காட்! இதற்கெல்லாம் புத்தகம் அவசியமா? என்று என்னுள் கேள்வி எழுந்தது. வாழ்வின் அடிநாதமாய் நிற்கும் உணர்வு அது என்று அன்று புரிந்தது. அவள் அம்மா சிரித்துக் கொண்டே அங்கு வந்தாள். "நல்ல புத்தகம் இல்லையா?" என்றாள். நான் ஒருவன்தான் அசடு வழிந்தேன் அப்போது.
மாலை உணவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாயின. அவளுக்கு சமயலறையில் உதவி செய்து கொண்டே பேசிக் கொண்டு இருந்தேன். பழைய கதைகள், பிடித்த விஷயங்கள், புத்தகங்கள் என பேச்சு போனது. இடையிடையே அவள் விரைவில் அந்த ஊரை விட்டு போய் விடப் போவதாய் சொன்னாள்.
மாலையில் அவள் நண்பன் வந்திருந்தான். கையில் பெரிய சாக்ஸபோன் வைத்திருந்தான். படி ஏறி வந்த அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். வேறு யாரும் வருகிறார்களாவென யோசிப்பதற்குள், அவனது புதிய தோழியும் கூட வந்திருந்தாள். நிலையை ரொம்ப கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று மனது சொன்னது. கே.பாலச்சந்தர் படம் போல் சீன் அமைந்துவிட்டது தற்செயலானதுதானா? என்ற கேள்வி ஓங்கி என்னுள் நின்றது.
அவனது புதிய தோழி பாரிய வெட்கத்தில் மூழ்கியிருந்தாள். காரணங்கள் பல, முதன் முறையாக அவளை இவன் தன் பழைய காதலி வீட்டிற்கு கூட்டி வருகிறான். அவள் இதற்கு முன் தன் இனம் சாராத வேற்று நாட்டுனருடன் பழகியதில்லை. அவள் அப்போதுதான் ஜெர்மன் கற்றுக் கொண்டு வருகிறாள். முதல் ஒரு மணி நேரம் அவள் வெட்கத்தை போக்குவதிலேயே கழிந்தது. அவளை தைர்யப்படுத்தி இருக்க வைக்க அவளுக்கு அடிக்கடி முத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. அது ஒரு அசாதரண சூழ்நிலை! சிறுமி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. தன் தந்தையின் மீதுள்ள பழைய கோபங்களுக்கெல்லாம் இப்போது கணக்குத் தீர்த்துக் கொண்டு இருந்தது. சிறுமியின் தாய் பெரிய மனதுடன் அவளை வரவேற்று, உபசரித்து அவளை தைர்யப்படுத்திக் கொண்டிருந்தாள். நான் ஏதோ தினம் இந்த மாதிரி சூழலில் வாழ்வது போல் மிக சகஜமாக நடக்க முயன்று கொண்டிருந்தேன்.
மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் இடி. பாவம்! சிறுமியின் அப்பாவிற்கு குழந்தையிடமிருந்து, அதன் தாயிடமிருந்து, தன் புதிய காதலியிடமிருந்து என பல்முனைத் தாக்குதல். ஆனால், எந்த அசிங்கமும் இல்லாமல் நீரின் உள்ளே எரிமலை வெடிப்பது போல் அவரவர் வெடிப்புகள் தணிக்கப்பட்டு, ஆனாலும் கிடைக்கும் சந்தர்பத்தில் வெடித்துக் கொண்டிருந்தன. நல்ல ஒயின், நல்ல சாப்பாடு. இரண்டும் இறங்கிய பின் நிலமை இன்னும் சமாளிக்க கூடியதாக இருந்தது. அவன் சாக்ஸபோன் வாசித்தான். வழக்கமான பலத்தில் வாசித்தால் பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான் என்பதால் அடக்கி வாசித்தான்!
இப்படியே பொழுது இரவு 12 மணிவரை போனது. குழந்தை தூங்கிப் போயிருந்தது. அவன் வந்த கடமை முடிந்து விட்டது போல், "சரி, நாங்கள் வருகிறோம்...அடுத்து ஒரு டிஸ்கோவிற்கு போகவேண்டும், யாராவது வருகிறீர்களா" வெனக் கேட்டான். எனக்கோ, அவளுக்கோ அந்த பலம் இல்லை. "இரவு இன்னும் யவ்வனனமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தோம்.
அன்றைய பொழுது மிக அசாதரணமாகப் போய்விட்டதை இருவரும் உணர்ந்தோம். குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது. அவள் என்னைப் பார்த்து, "உனக்கு ரேழி மேல் படுக்கையில் போர்வை, தலையணி எல்லாம் வைத்திருக்கிறேன். நான் வழக்கமாக படுத்துக் கொள்ளும் இடம் அதுதான், இன்று நீ அங்கு உறங்கு" என்றாள். எனது அடுத்த கேள்வியை எதிர்பார்த்து, "நான் குழந்தையுடன் அவளது படுக்கையில் படுத்துக் கொள்கிறேன். அசெளகர்யம் ஒன்றுமில்லை. பல நாள் நான் இப்படி அவளுடன் உறங்குவது உண்டு" என்று சிரித்தாள். அவளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு நான் படுக்கப் போனேன். படுக்கை இதத்தில் விரைவிலேயே தூங்கிப் போனேன்.
காலையில் நான்தான் முதலில் எழுந்தேன். கீழே வந்த போது குழந்தை யார்? தாய் யார்? என்று தெரியாத அளவில் இருவரும் உறங்கிக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் தேனீர் போட்டு, குழந்தைக்கு பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். இரண்டு சிட்டுக் குருவிகள் கண் விழிப்பது போல் இருவரும் விழித்தனர். காலை உணவு முடிந்தவுடன் நான் பயணப் பட்டேன்.
நான் கிளம்பும் முன், அவள் என்னிடம் வந்து என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். மிக, மிக இறுக்கமாக....ஆண்டாள் நாச்சியார்மொழியில் சொல்வது போல் "குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு அற்ற குற்றம் அவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே" என்று கட்டிக் கொண்டாள். இவ்வளவு இறுக்கமான அணைத்தலை நான் என் வாழ் நாளில் கண்டதில்லை. மூச்சு முட்டியது. அவள் நெடுநேரம் என்னை நெஞ்சு நிறைய அணைத்துக் கொண்டு இருந்தாள். அவளை பார்க்க வந்ததிற்கு நன்றி சொன்னாள்.
ஊர் வந்து சேரும் வரை அந்த இறுக்கம் என்னுள் இருந்தது. அந்த அணைப்பின் பொருளை வாழ்நாள் பூரா தேடினாலும் அறிந்து கொள்ள முடியாது என்று என்னுள் ஏதோ சொன்னது.
இந்தியா டுடே
மே 13 1998
அடுத்த கால் மணியில் தொடங்கிய பள்ளி அவனுக்கு எந்த மாறுதலையும்
தரவில்லை. தமிழ் ஆசிரியர் ஐந்திணைக் கடவுளரை விளக்கத் தொடங்க
திடுமென்று அவன் வாந்தி எடுத்தான்.
அது ஒரு கோடை நாள். வெய்யில் சற்று தணிந்திருந்தாலும் பூமி இன்னும்
கொதித்துக் கொண்டிருந்தது. காற்று வரும் என்ற நம்பிக்கையில் மடக்கு
நாற்காலியுடன் வாசலுக்கு வந்தான்.
"வணக்கம் சார்", என்ற குரல் வர நிமிர்ந்தான். கையில் நோட்டுப் புத்தகத்துடன்
ஒரு அழுக்கு வேட்டி.
"ஆத்தாவுக்கு ஆடு வெட்டி, பொங்க வைக்கனும்"
"அதுக்கு நா என்ன பண்ணணும்?"
"நன்கொடை எழுதுங்க சார்" என்று நோட்டை நீட்டினான்.
கருப்பசாமி 50 எழுத, பட்டியல் ரூபாய் 10க்கும் குறையாமல் பல பெயர்களாக
நீண்டு கொண்டிருந்தது.
"நேத்துதானேப்பா இன்னொருத்தர் இதே மாதரி காசு கேட்டு வந்தார்"
"அது பனையூர் அம்மனுக்குங்க. எங்க சாமி மாரிங்க."
"ஏன்யா, ஆடு கீடு வெட்டாம, வெறும் பொங்க வெச்சா, உங்க ஆத்தா ஏத்துக்காதா?"
"சார் பெரியார் கட்சிங்களா?"
"நான் எந்தக் கட்சியுமில்ல, ஆடு வெட்டாம பொங்க வெச்சீங்கன்னா காசு தரேன்"
"அது எப்படி சார் பளக்கத்தை மாத்த முடியும்? பலி இல்லாம பொங்க வச்சா
ஊர்லே மளை தண்ணி இல்லாம போய்டுமே?"
அவனுக்கு ஏனோ வயிற்றைப் புரட்ட, விரைவாக வீட்டிற்குள் விரைந்தான்.
கொஞ்ச நேரங் கழித்து வெளியே வந்தபோது அந்த அழுக்கு வேட்டி புத்தகத்துடன் கோடி
வீட்டுக் காரருடன் பேசிக் கொண்டிருந்தது.
அப்போது சரியாக மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க கருவேலித் தலைச்
சுமையுடன் பெண்கள் வேகு, வேகு என மலைப் பகுதிகளிலிருந்து வந்து
கொண்டிருந்தனர். தினமும் பார்க்கும் காட்சிதான். "சுள்ளி பொறக்க"
என்று காலையில் போகும் சனங்கள் மாலையில் சாரி, சாரியாக விறகுடன்
வருவது வழக்கமாகிப் போய்விட்டது. விறகு எப்போதும் காய்ந்து உலர்ந்து போய்
இருப்பதில்லை ! தலையும், குழையுமாய் பச்சை மரம் கூட... மலையைப் பார்த்தான்.
சொறி வந்தவன் தலை போல் திட்டு, திட்டாய் !
அவனது அறிவியற் குறிப்பு சொன்னது விறகடுப்பில் எழும் வெப்பம் உலைத்
தண்ணீரை நெருங்குவதற்குள் அறுபது சத விகிதம் அடுப்பின் இடுக்கு வழியாக
வெளியே போய் விடுகிறது என்று.
"என்னங்க இப்படி, பச்சை விறகா போய் பாத்து வாங்கிட்டு வந்திருக்கீங்க.
நெருப்ப விட பொகதான் ஜாஸ்தியா இருக்கு" என்று கொல்லு, கொல்லென்று
இருமிக் கொண்டே அவசரமாய் நல்ல காத்து வாங்க வீட்டிலிருந்து வெளியே வந்தாள்
பக்கத்து வீட்டு அம்மா!
அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது தான் வெளியூர் செல்ல வேண்டுமென்று.
பஸ்ஸில் இடம் கிடைக்க வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அவன் விரைந்தான்.
பஸ் நின்று கொண்டிருந்தது. உள்ளே அனல். மகளிர் புறம் மறந்து ஆடவர் பகுதியைப்
பார்த்தால் ஆட்கள், ஆட்கள். ஆகா, அங்கொரு காலி இடம். உட்கார்ந்தான்.
பஸ் விரைவில் கிளம்பாதா? அனல் காற்று, மீண்டும். மட, மடவென கூட்டம் சேர
பஸ் ஒருவழியாய் கிளம்பியது.
"எவன்டா நான் துண்டு போட்ட இடத்துலே?" என்ன அதட்டல்!
யார் அது என்று திரும்புவதற்குள் இவன் பிடறியில் விழுந்தது ஓர் அடி!
ஆடிப் போய் விட்டான். வலியுடன் அடித்தவனைப் பார்த்தால் அவன் கண்களில்
கொலை வெறி. அப்படியென்ன தப்பு செய்து விட்டோம் என்று கீழே பார்த்தபோது
ஒரு அழுக்குத் துண்டு காலடியில்! அடித்தவன் போட்ட துண்டு. இவன் வருவதற்கு
முன் எப்படியோ தவறி விழுந்திருக்கிறது.
"ஏம்பா, நான் சரியா பாக்கலை. வந்து கேட்டா எந்திரிக்க மாட்டேனா?
அதுக்கு அடிக்கணுமா?"
"கொளாய் போட்டவனையெல்லாம் தெரியாதா எனக்கு. துண்ட கீள
தள்ளிட்டு உக்காந்தா ஆச்சா? பேச்சென்னடா பேச்சு?"
இவனுடன் எப்படி பேசுவது? இவன் வாயால் பேசும் சாதி இல்லையே!
வேறு வழியில்லை, எழுந்தான். மனதில் வெறுமை. ஏன் இந்த மனிதர்கள்
முரடர்களாக இருக்கிறார்கள்? இந்த கோடையா? இந்த கூட்டமா?
சமூக நிலை ஏற்றத் தாழ்வுகளா? இந்த சூழலா? இதில் எது இவர்களை இவ்வளவு
தூரம் பாதிக்கிறது? வெளியே பார்த்தான். விளைச்சல் நிலங்களெல்லாம்
பிளாட் போடப்பட்டு விவசாயம் நின்றிருந்தது. கண்ணுக் கெட்டிய தூரம்
வரை மரமோ, வேறு பசுமையோ தெரியவில்லை. மேல் மண்ணை வாரி
சுருட்டிக் கொண்டு புழுதி அடுத்திக் கொண்டிருந்தது. பழமையான
அமெரிக்க இந்திய கலாச்சாரமான மயன் கலாச்சாரம் திடுமென எப்படி
அழிந்தது என எண்ணிப் பார்த்தான். அவர்கள் காடுகளையெல்லாம் அழித்து
நகரங்களைப் பெருக்கினர். காடுகள் இருக்கும் போது நிலத்தின் மேல்
அடுக்கு மண் இலைகளாலும், தழைகளாலும், புல்லாலும் நிரம்பி நீர்ப்பசையுடன்
பாதுகாக்கப் படுகிறது. காடு போகும் போது நிலத்தின் மேல் அடுக்கு மண்
பாதுகாப்பின்றி புழுதியாய் காற்றோடு போகிறது. நிலத்தின் விளைச்சல் குறைகிறது.
இப்படித்தான், மேல் மண் பாதுகாப்பில்லாத மயன் காலத்து நிலம் வந்த ஒரு
பெரு வெள்ளத்தைத் தாங்காமல் ஆடிப் போக பெரும் நகரங்கள் மண்ணில் சாய்ந்தன.
சூழல் பிரக்ஞை இல்லாத ஒரு கலாச்சாரம் தன் அழிவிற்கு தானே வழி வகுக்கிறது.
இவர்களுக்கு யார் இதைச் சொல்வர்?
வேகமாக போன பஸ் திடுமென்று நிற்க, ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்து எழுந்து
நின்று விசாரித்த போது துக்கம் காத்திருந்தது.
"என்னப்பா சமாச்சாரம்?"
"மறவர் போராட்டம்."
"சரி போராடுங்களேன், அதுக்காக வண்டியை ஏன் நிறுத்தணும்?"
"அப்பத்தான்யா அரசாங்கத்துக்கு புத்தி வரும்."
வழியை மறித்துக் கொண்டு உயிரையும் மதிக்காது வீர மறவர்கள் தெருவில்
படுத்திருப்பார்களோவென பார்க்க அவன் கீழே இறங்கினான்.
மறவர் படுத்திருக்க வில்லை. தளிர்த்த மரங்கள் சவமாய் கிடந்தன பாதையில்.
இது என்ன அநியாயம்? இவர்கள் போராட்டத்திற்கு சம்மந்தமேயில்லாத
மரங்கள் சாரி, சாரியாக களப் பலியாக! வாய் இருக்கும் இவர்களாலேயே
தங்கள் குறைகளை வாய் வழியாய் சொல்லத் தெரியவில்லை, வாயில்லாத
மரங்கள் எங்கே போகும் தங்கள் குறையைச் சொல்ல? அவனுக்கு வயிறு பற்றி
எரிந்தது.
வண்டி இப்போதுக்கு கிளம்பாது என்றறிந்த அவன் ஒரு டீக்கடையில்
உட்கார்ந்தான். தொங்கிய பத்திரிக்கையில் கொட்டைச் செய்தியாய்
வீரப்பன் பிரதாபம்! "சந்தன மரப் படுகொலை" அப்படித்தான் இருந்திருக்க
வேண்டும் செய்தி. மனிதன் தான் உலகம். அவன் வைத்ததுதான் சட்டமென்றாகிப்
போச்சு. சந்தன மரம் கூட்டுக் குடும்பத்தில் வளரும் பிள்ளை போன்றது.
காடுகளில்தான் அது வளர முடியும். அது வளர பக்கத்தில் நிறைய மரங்கள் இருக்க
வேண்டும். மற்ற மரங்களின் வேர்களுடன் தன் வேர்களை இணைத்து தன்
உணவை எடுத்துக் கொள்கிறது சந்தன மரம். ஒரு மரம் செழித்து வளர ஓர்
மனுஷ ஆயுசு போறாது. ஆனால் அதை வெட்டிச் சாய்க்க மனிதனுக்காகும்
நேரம் சில மணிப் பொழுதுகள். அவனுக்கு வேர்த்துக் கொட்டியது.
மழை வேண்டுமென்று நோன்பிருந்தாள் ஆண்டாள். முகிலும், மரங்களும்
காதலர்கள் அன்றோ? ஒன்றில்லாமல் ஒன்றில்லை. மரங்களுக்காகத்தானே
மேகம் குடம், குடமாய் தண்ணீர் கொண்டு வருகிறது. காடுகள் இல்லாவிடில்
பின் முகில், "ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி" மழை கொண்டு வருமோ?
இந்த உயிர்க் கொலையைத் தடுக்க முடியாத அவன் மனம் வலித்தது, தலையை கை
தடவிய போது பிடறியும் வலித்தது.
மெது, மெதுவாக நடந்து பக்கத்து ஊர் ரயில்வே நிலையத்திற்கு வந்து ரயிலைப்
பிடித்தான். கொஞ்சம் குளிர்ந்த காற்று வந்தது. தூக்கம் கூட வந்தது.
"இந்த கொரில்லாக்களுக்கு வேண்டும் சார்!" எதிர் கிழம் பேச்சை வளர்த்தது.
"நீங்க எந்த கொரில்லாவைச் சொல்லறீங்க? காட்டுலே யார் கண்ணுக்கும் படாம,
தேமேன்னு வாழற சங்கோஜமான பிராணியைச் சொல்லறீங்களா? "
"அட, அதச்சொல்லல தம்பி, இந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்களைச் சொல்லறேன்."
"ஓஹோ, அதுவா, சின்ன நாடாயிருந்தாலும் ஒரு வல்லரசுக்கே தண்ணி காட்டறாங்களே !
"யார் சொன்னது? காட்டுலே ஔ¢யரையா பயலேன்னுட்டு காட்டுலே
மருந்தைத் தெளிச்சிட்டான்லே ! இலையெல்லா உதுந்து போனா எங்கே
போய் ஔ¢ய?"
"இத நீங்க பிராதபம்ன்னு நினைக்கிறீங்களா? இவங்க சண்டைக்கு காடு என்ன
சார் பண்ணிச்சு, பாவம்! ஏன் சார் இப்படி காடையெல்லாம் அழிச்சா எங்கேர்ந்து
மழை வரும்?"
"அதுக்கு வர்ண ஜபம் பண்ணினா போதும்!"
அவன் மனது மீண்டும் வலிக்க ஆரம்பித்தது. சண்டைகளின் உள்ளார்ந்த திருப்தி எதில்?
சுயம் மடைமையாய் மகிழ்ச்சி அடைவதில் தானே? இதற்கு கைச்சண்டை போதுமே?
மானுடம் வெகு தூரம் வந்தாகிவிட்டது. பகுத்தறிவு வளர்ந்து விட்டதாய் நம்பப் படுகிறது!
அறிவின் வெளிப்பாடாய் வான ஊர்திகள், வேதிமங்கள். அறிவின்மையின் கூப்பாடாய்
வான ஊர்தி வழியாக வேதிமங்கள் காட்டை அழிக்க! உலகம் என்பது ஆகாச வெளியில்
அனாதைக் குழந்தையாய் மிதக்கும் கோளம். சூன்யத்தின் வெறுமையில் தன்னுள் தானே
தளிர்ப்பித்து வாழும் உயிர் இயக்கம். தன்னுள் ஒன்றை ஒன்று சார்ந்து. ஒன்றின் மடியில்
மற்றொன்றாய். ஔ¢யில் வளரும் மரம், பட்டையை உண்ணும் கரையான், கரையானைத்
தின்னும் பூச்சி, பூச்சியை விழுங்கும் எலி, எலியைத் துரத்தும் பாம்பு, பாம்பைத் தேடும் கீரி,
கீரியைப் பிடிக்கும் கழைக் கூத்தாடி என்பதாக.. ஒன்றின் மீது ஒன்றாய்..
"என்ன உங்களுக்கு வர்ண ஜபத்துலே நம்பிக்கை இல்லையா?" கிழவர் பிடி விட வில்லை.
"அது இல்ல, சார், நமக்கு உலக இயக்கத்தின் உண்மைகள் தெரிவதற்கு முன்னால,
ஏதேதோ செய்து ஒண்ணு, கெடக்க ஒண்ணு ஆகிப் போச்சுன்னா?"
"நீங்க என்ன சொல்றீங்க?"
"இப்ப பாருங்க, பட்டுப்பூச்சியின் சிறகை ஒடிச்சா பருவ நிலைகள் மாறும்ன்னு
புதிய க்வாண்டம் இயல்பியல் சொல்லுது. உலக இயக்கம் அவ்வளவு மென்மையானது.
ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையது."
"நீங்க என்ன சொல்லறீங்கன்னு புரியலை. ஆனாலும் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு
இது வேணும்."
கொள்கைகள், தீர்மானங்கள், அபிப்பிராயங்கள். சுயத்தின் வெளிப்பாடுகள்.
எப்போதும் குறையுள்ள சுயத்தின் வெளிப்பாடுகள். அவன் மேலே பேசவில்லை.
நகரம் ஒரு வழியாய் வந்து சேர்ந்தது. கட்டடங்கள். கட்டடங்கள். மேல் நோக்கிய
வளர்ச்சியின் அடையாளமாய்.. தேன் கூட்டுக் கண்களாய் வீடுகள். மூச்சு விட
இடமுள்ளதா? சாணிக் குமியல் வழிந்து அழுக்கு ஆற்றில் கலக்கிறது.
அந்த நீரில் கால் கழுவ கரையெல்லாம் மனிதத் தலைகள்.
சே! இது என்ன வாழ்க்கை? நகரின் கூட்டம் அவனை அலைபோல் நகர்த்தி கரை
சேர்த்தது. பசித்தது. சாப்பிடலாமென எண்ணி பையில் கை வைத்தான்.
பர்ஸைக் காண வில்லை.
"என்ன காதைத் தடவிக்கிட்டே வர?" சக பிரயாணி ஒருவரின் கேள்வி.
"இல்ல, தோடு இருக்காண்ணு பாத்துக்கறேன்" உள்ளூர் வாசிகள் போலும்.
விவரம் தெரிந்திருக்கிறது. இவன் அப்பாவி. இவன் காசு போச்சு. இவன் தெருவில்
இறங்குமுன் நகரம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருந்தது.
"ராமன் வாழ்க! பாபர் ஒழிக!லி ராமனை வழிபடும் பக்தர்கள் மாதிரி அவர்கள் தெரியவில்லை.
கையில் அரிவாளும், கடப்பாரையும்! இது என்ன கோரமான காட்சி! வழிபடும் பக்தர்களின்
கண்களில் இருக்க வேண்டிய மெய்யுணர்வின் அடையாளமாகிய சாந்தம் அங்கு எங்குமே
இருப்பதாகத் தெரிய வில்லை. ஆழிக்கூத்தின் உச்ச கட்டம் போல்! பார்க்கும்
கண்களிலெல்லாம் அழிக்கும் வெறி. சில கடைகள் தாக்கப் பட்டும், குல்லா வைத்திருந்த
சிலர் உதை பட்டுக் கொண்டிருந்தனர். உலகிற்கு இந்து-முஸ்லிம் ஒருமைப் பாட்டை
பறை சாற்றும் நிகழ்ச்சியாய், ஒருவர் குருதியை மற்றொருவர் ருசி பார்த்துக் கொண்டு.
தடம் மாறிய ரயில் நகரம் செல்லாமல், நரகம் சென்று விட்டதாய் அவன் உணர்ந்தான்.
பஸ் போக்குவரத்து மொத்தமாய் ஸ்தம்பித்து விட, சந்து பொந்துகளில் புகுந்து, அடி
படாமல் சேர வேண்டிய வீட்டிற்கு வந்த போது இருட்டி விட்டது. காற்றில் புகையின் வாசனை.
வீடுகள் பற்றி எரிந்து சுவாலைத் சிதழ்கள் பொறிப் பொறியாய், மின்னி இரவில் கரைந்தன.
துக்கம் துக்கமாக வந்தது அவனுக்கு.
மனிதனை மனிதனாக யாரும் பார்ப்பதில்லையே, ஏன்? ஆறறிவு படைத்தவன் மனிதன்
என்பார்கள். ஆறாவது அறிவு, பகுத்தறியும் அறிவு. கேட்பார் சொல்லக் கேட்டு
மதியிழக்காமல், நல்லது, கெட்டதை ஆராய்ந்து அறியும் அறிவு. அன்றைய நிகழ்ச்சிகள்
அந்த அறிவு மனிதனுக்கு இருப்பதாய் காட்டவில்லை. மாறாக, காட்டை அழிப்பவன்
ஹீரோவாகி விடுகிறான். மறவர்கள் தங்கள் வீரத்தின் வெளிப்பாடாய் பொது மரங்களை
வெட்டிச் சாய்க்கின்றனர். விளையும் நிலங்கள் காசுக்கு இரையாகி பிளாட்டாகிப்
பாழாகின்றன. சாமிக்காக ஆடும் பலியாகிறது, அதே கையால் அடுத்த மனிதனும்
பலியாகிறான். மதி கெட்ட சுயத்தின் வெளிப்பாடாய், எங்கு நோக்கினும் பலிகள்.
மனிதனின் பகுத்தறிவு தோற்று விட்டது.
இவனது நண்பன் இவன் வந்த போது வீட்டிலில்லை. நண்பனின் மனைவியும், குழந்தைகளும்
மட்டுமிருந்தனர். விஜாரித்ததில் இவனது நண்பனும் தீவிர மத இயக்கங்களில்
ஈடுபாடு கொண்டவன் எனத் தெரிந்தது. வீட்டில் மூலைக்கொரு மாரியும், பத்ரகாளியும்
ஆவேசமாய், படங்களாய்.
இவனுக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. நண்பனின் பெற்றோர்கள் நிரம்ப
மெய்யுணர்வு உடையவர்கள்.
என்று பாடி பூவிலும், காயிலும் இறைவன் உறைவதாய் கண்டு
உள்ளுருகும் பண்பாடுடைய குடும்பம். பழகுவதற்கு மென்மையான மனிதர்கள்.
நண்பனை நினைத்தால் வருத்தமாக இருந்தது.
நகரத்திற்கு வந்தால் கடவுள் கூட மாறி விடுகிறார். உள்ளம் மறத்துப் போய் விடுகிறது.
கரப்பான் பூச்சிகள் போல் நெருக்கி அடுத்திக் கொண்டு வாழும் பெரிய நகரங்களாகிய
நியூயார்க், சிகாகோ, பாரிஸ், லண்டன், டோக்கியோ போன்ற நகரங்களில்தான்
புத்தி பேதலித்த மனிதர்கள் அதிகமாகவும், வழிப் பறியும், கொள்ளையும் அதிகம்
என்று படித்தது ஞாபகத்திற்கு வந்தது. உயிர்கள் இடையூரின்றி வளர இடைவெளி
அவசியமெனப் படுகிறது. இயற்பியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதனுக்கு
இது மிகவும் தேவையெனத் தெரிகிறது. இடைவெளி குறையும் போது மனிதனுள்
உறையும் இறைமையும் போய் விடுகிறது.
இறைமையும், பகுத்தறி¨யும் இழந்த மனிதர் உலகில் எஞ்சி நிற்பது பழியும்,
பலியும் தான்.
அவனுக்கு கொஞ்சம் மயக்கமாய் வந்தது.
அவன் பள்ளிச் சிறுவனாய், பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறான்.
தமிழ் ஆசிரியர் உலகை ஐந்திணையாகப் பிரிக்கிறார்.
மருதம். நிலமும், நிலம் சார்ந்த பகுதியும். வளமான நதிப் பாசனம்.
எங்கும் பசுமை, அழகு, நிறைவு. மருத நிலத்துக் கடவுளும் அம்மக்களைப்
போலவே ஆடல், பாடல், புணர்வு மிகக் கொள்ளும் இந்திரன்.
முல்லை. காடும், காடு சார்ந்த பகுதியும். எப்போதும் பசுமை, குளிர்ச்சி, நிறைவு.
முல்லைத் தெய்வம் கண்ணன். காட்சிக்கு எளியவன், அழகன். மக்களோடு
மக்களாய் வாழ்பவன்.
பாலை. உயிர் தளிர்க்க வகையில்லாத நிலப்பகுதி. வறட்சியும், வெறுமையும்
மிக்க பகுதி. கடுமையும், போட்டியும் மிகுந்து, பலமும், வன்மையும் இருந்தால்
மட்டுமே வாழக்கூடிய பகுதி. பாலைத் தெய்வம் காளி.
மக்களைப் போலவே தெய்வங்களும் !
கட்டுப் பாடற்ற மக்களை அடக்க மென்மைத் தெய்வங்கள் போதாது.
குரூரமிக்க தண்டனைத் தெய்வங்கள் தேவை. பலியும், சாவும் கேட்கும் தெய்வங்கள்.
அரேபிய பாலையில் தோன்றிய ஆதி யூத தெய்வமாகிய ஜேஹோவா போல.
பழிக்குப் பழி, கொலைக்குக் கொலை.
இவனுக்கு வயிற்றைப் பிரட்ட வாயெலெடுத்தான்.
"ஐயையோ ! சாருக்கு உடம்பு சரியில்லை போலருக்கு" என நண்பரின்
மனைவி முதலுதவி செய்த போது அவனுக்கு மீண்டும் தெளிவு வந்தது.
"முல்லையும், மருதமும் போச்சுங்கம்மா, பாலை பெருகி வருது. பழி பாவத்துக்கு
இனி மனுஷன் அஞ்ச மாட்டான். மானுடம் வென்றதம்மா என இனி மார்தட்டி
பாட ஒரு கம்பன் வர மாட்டான்"
எனச் சொல்லி இவன் ஓவென அழ ஆரம்பித்தான்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
சுப மங்களா (ஜூலை 1994)
காதலெனும் சோலையிலே
நாம் பழகிய காலங்கள்
கவரில் போடுவதற்கு முன் கடேசியாக மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தான்.
நன்றாக வந்திருப்பதாகத் தோன்றியது. கவிதைக்கு வைராக்கியம் என்று
தலைப்பிட்டிருந்தான். அதுவும் சரியாக இருப்பதாகவே பட்டது. கவரில் இதழின்
முகவரியை எழுதி ஒட்டினான். இந்த இலக்கிய இதழில் இவன் கவிதைகள்
ஓரிரு முறை வந்திருக்கிறது. நம்பிக்கையுடன் கவரில் நாக்கைத் தடவினான்.
அதில் "ஸ்ராபெரி" வாசனை வந்தது. பிடித்திருந்தது. கவிதை வரும்
என்று மனது சொன்னது.
இவனது முதல் கவிதை இப்பத்திருக்கையில்தான் வந்தது. அன்று அவனுக்கு
தலை கால் புரியவில்லை. தேன் குடித்த நரி மாதிரி இருந்தான். இவனது ஆத்ம
நண்பன் கந்தசாமி பிராபகரனுடன் சினிமாவுக்குப் போனான். ஔவை சண்முகி
படம் பிரத்தியேகமாக சில தினங்களுக்கு காண்பிக்கப் பட்டது. சினிமாவிற்குப்
பிறகு, மெக்சிகன் ரெஸ்டாரெண்ட்க்கு போய் உறைப்பாய் சிக்கன் கரியும்,
பச்சை மிளகாய் ஐஸ் கிரீமும் சாப்பிட்டான். நிறைய பியர் குடித்தான்.
மெக்சிகன் பியர் ஜெர்மன் பியரைவிட கசப்பாக இருந்தது முதலில்.
அப்புறம் முளகாயின் உரப்பில் ஒன்றும் தெரிய வில்லை.
இவ்வளவுக்கும் பின்தான் அவனுக்கு சமாதானம் ஆனது. இருந்தாலும்
தூங்குவதற்கு முன் மீண்டும் ஒருமுறை அச்சில் இருந்த தன் கவிதையை
வாசித்து விட்டு படுத்தான். கவிதை எழுதினாலே இந்த அவஸ்தைதான்.
தூக்கமே வராது. இன்றும் அப்படித்தான். தனது இன்றைய கவிதையால்
அவனுக்கு, இன்பமும் துன்பமும் இருந்தது. இன்பம் ஆக்கத்தால் வந்தது.
கவலை, எழுதிய காவியநாயகியை கடேசிவரை அடையமுடியாமல் போனது.
அவளுக்கு இப்படி எத்தனை கவிதை எழுதிக் குடுத்திருப்பான்.
அவளும் அதையெல்லாம் பத்திரமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் போட்டு
வைத்திருந்தாள். அப்போதெல்லாம் கவிதை பிரசுரத்திற்கு இல்லை.
எல்லாம் அவளுக்குத்தான் என்றிருந்தது. மொட்டை மாடியில் அரச மரத்தைப்
பார்த்துக் கொண்டே இருப்பான். பின் வேகமாக எழுதுவான். இவன் அக்கா,
அத்தான் இவன் என்ன எழுதுகிறான் என பார்க்க எவ்வளவோ தந்திரம் செய்து
பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இவன் காதல், இவன் ரகசியம்.
இவனுக்கும், சாயாவிற்கும்தான்.
அப்படித்தான் நினைத்திருந்தான். சாயாவின் அப்பா இவன் கவிதைகளையெல்லாம்
வாசிக்கும் வரை. ஒருநாள், காலேஜ் நோட்ஸை வாங்கப் போகும் போது தனியாக
மடக்கி விட்டார்.
"என்ன காமேஷ், காலேஜ்லே படிச்சது போக, நிறைய நேரம் இருக்கு
போலே இருக்கே?" என்றார்.
எதற்கு அப்படிச் சொல்கிறார் எனத்தெரியாமல், எதற்கும் தற்காப்பாக,
"அப்டியெல்லாம் இல்லை சார், படிக்கவே நேரம் இருக்கரதில்லை.
ரிகார்ட்ஸ், பிரிபரேசன்ஸ்ன்னு ஏகப்பட்ட வேலை" என்று சொல்லி வைத்தான்.
"அப்படின்னா, நீங்க ராத்திரி தூங்கறதே இல்லையோ?" என்றார்.
"ஏன்?" என்றான் புரியாமல். ஏதோ சரியில்லை என்று அப்போதே மனதில் பட்டது.
இந்தக் கடுவன் என்றைக்கு நம்மிடம் பேசி இருக்கிறது. இன்னக்கிப் பாத்து மடக்கிடுச்சே
என்றிருந்தது.
"இல்லப்பா காதல் கவிதை எழுத எப்ப நேரம்
இருந்திச்சுங்கறதுக்காகதான்" என்றார். பகீர் என்றது.
பாவி இவனுக்கு எப்படித் தெரியும் தான் காதல் கவிதை எழுதுவது?
கலீல் ஜிப்ரன் பாணியில் அந்தரங்கமாக எழுதிய வரிகளையும் படித்திருப்பானோ?
இருக்காது. வெறுமனே பாவால விட்டுப் பாக்கறான் என்று மனது சொன்னது.
"நீங்க எதைச் சொல்லறீங்க?" என பாவமாக முகத்தை வைத்துக்
கொண்டு கேட்டான்.
கடுவனுக்கு அதுக்கு மேலே பொறுமை இல்லை.
"பிராமண வீட்டுப் பையனா இருக்கையேன்னு பாக்கறேன்.
இல்லாட்ட இன்னேரம் கைய கால முறிச்சுப் போட்டிருப்பேன். உடம்பு மத,
மதப்பா இருந்தா என் பொன்னுதான் கேக்குதோ. படிக்கிற வயசில காதல்
என்னப்பா, காதல். இத பாரு இப்ப சொல்றேன் கேளு, காலா காலத்துலே
ஒழுங்கா படிச்சுட்டு எங்கேயாவது வேலையை வாங்கிக்கிட்டு போய் சேரு.
ஒன்னைய நம்பி பாவம் அந்த பாப்பாத்தி தனியா இருக்கா. என்ன புரியுதா?"
என்றான்.
தலை பயத்தில் தானாக ஆடியது. இவன் அந்தரங்களை அறிந்து கொண்டது,
அதை பட்டென வெளிச்சத்தில் போட்டு உடைத்தது, இவன் அம்மாவை "பாப்பாத்தி"
என்று இளக்காரமாக சொன்னது, எல்லாவற்றிற்கும் மெலாக இந்த மண்டு சாயா
நோட்டு புத்தகத்தை அப்பா பாக்கிற மாதிரி வைத்தது எல்லாம் சேர்ந்து கொண்டு
கண்களில் நீர் கோர்த்தது. அழுதால் அவமானப் பொய் விடுமே எனப் பயந்து
சொல்லிக் கொள்ளாமல் வெடுக்கென வெளியேறினான்.
"இந்த ரோசத்தை கடேசி வரை காப்பாத்து. இன்னொரு வட்டம் கவிதை,
கழுதைன்னு எதாவது பார்த்தா தொலைச்சுப் புடுவேன் படுவா" என்றான் சத்தமாக.
அவமானமாக இருந்தது.
சாயாவுக்குப் போய் இப்படி ஒரு அப்பாவா? இலக்கிய ரசனையே இல்லாமல்.
நாகரீகம் தெரியாத மடயன் என பலவாறு திட்டிய படியே வீடு வந்து சேர்ந்தான்.
ராத்திரி சாப்பிடவே இல்லை. அம்மா என்னன்னமோ கேட்டுப் பார்த்தாள்.
ஒன்றுக்கும் பதிலில்லை. ராத்திரி து¡ங்கவும் இல்லை. அவமானத்தால்
அவன் மனம் குன்றிப் போய் இருந்தது.
அதே மன நிலை மீண்டும் வந்தது இப்போது காமேஷீக்கு. அதைத் தவிற்க
காரை அவசரமாய் எடுத்து கொண்டு தபால் நிலையம் சேர்ந்தான்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிப் போச்சு. சாயா எவனாவது
கருத்தபாண்டியனை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி குழுந்தை
கூட பெத்து இருப்பாள். இவன்தான் இன்னும் ஒண்டிக்கட்டையாய்
வெளிநாட்டில் மேல் படிப்பென்று அலைகிறான்.
காமேஷ் புதிதாக ஒரு பென்டியம் கணினி வாங்கி மோடமெல்லாம்
பொருத்தி சர்வதேச வலையில் நீந்த ஆரம்பித்து இருந்தான். வாரக் கடேசி
நாட்கள் கணினியில் சென்றன. அன்றும் அப்படித்தான், தவளை தாண்டுவது போல்
இணையத்தின் பக்கம் விட்டு பக்கம் தாவிக்கொண்டு இருந்தான்.
அங்கயற்கன்னி ஒயின்ஷாப் என்ற வார்த்தை சிவப்பும், மஜந்தாவும் கலந்த
வர்ணக் கலவையில் ஜொலித்துக் கொண்டு இருந்தது. வா, வா என்றது!
காலங்காத்தலே ஒயின் சாப்பிடுவதா? என்ற கேள்வி வந்தது. சிரித்துக் கொண்டான்.
இது வெறும் மாயா பஜார் தானே!
கணனிக்குள் எல்லாம் வந்தாகி விட்டது.
அன்று ஒரு செக்ஸ் ஷாப்புக்கு போயிருந்தான். இவனது ஸ்டீரியோ சிஸ்டம்
கொடுத்த எபெக்ட்டிலே நிஜமாவே கலவை முடித்த இன்பம் கிடைத்தது.
கணினி வழியாக அன்று ஜப்பான் போய் வந்தான். கியோத்தோ தெருவழியாக
கொஞ்சம் உலாவி கைஷா கன்னிகளுடன் கொஞ்சம் தேநீர் அருந்தி கையைத்
தொடாமலே எட்ட நின்று உன்மத்தம் அடைந்து திரும்பினான். உடலில் மத, மதப்பு
இல்லாத நேரத்தில் சுமித்தோனியன் அருங்காட்சியகம், நாசா வின்வெளி ஆய்வகம்,
பெர்க்லி பரிணாம காட்சியகம் என கொஞ்சம் பார்த்து வந்து கல்வி கேள்விகளில்
பாண்டித்யம் அடைந்தான்.
அன்று உடலில் ஹார்மோன்கள் மீண்டும் சுரந்து விட்டன. அங்கயற்கன்னியின்
அழைப்பை தட்ட முடியவில்லை. ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தான்.
"வாங்க, உங்களுக்கு சர்விஸ் தமிழிலா இல்லை ஆங்கிலத்திலா?"
என வாசல்காப்போன் கேட்டான்.
"தமிழில்" என்றான்.
"நீங்கள் கிளப்பு மெம்பர்தானே? உங்கள் அடையாள எண் என்ன?"
என அடுத்து கேட்டான்.
"இல்லை, இதுதான் முதல் முயற்சி. இன்று உங்கள் விருந்தினனாகக்
கொள்ளுங்கள்" என திரையில் பெயரை எழுதினான்.
"ஆகா, தாராளமாக. வந்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
அடுத்த முறை நுழையும் போது நீங்கள் அங்கத்தினர் ஆகி இருப்பீர்கள்".
வாயில் காப்போன் சொல்லில் ஒரு நிச்சயத்தன்மை இருந்தது.
காமேஷ் சிரித்துக் கொண்டான். எப்படியெல்லாம் வியாபாரம் நடக்கிறது இப்போது.
கடைக்கு போக வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
வீட்டிலிருந்தே ஜட்டி, பிரா கூட வாங்கிவிட முடிகிறது. விசா, மாஸ்டர் கார்டு
என்று எதாவதொரு வங்கி அட்டை இருந்தால் போதும். உலகையே கணினி வழியாக
வாங்கி விட முடிகிறது. கையில் காசு இருக்க வேண்டும் அது முக்கியம்.
பசிக்கு இட்லி தோசை கூட வாங்கிவிட முடிகிறது இப்போது.
கொஞ்சம் கூடுதல் விலை அவ்வளவுதான். நெல்லை எக்ஸ்பிரஸ் இட்லி சர்விஸ்
ஆரம்பித்து நாலு வாரம்தான் ஆகிறது. தொலைபேசி, கணினி எதுவழியாகயும்
ஆர்டர் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அலுத்துப் போய் வீடு திரும்பும் நாட்களில்
ரொம்ப செளகர்யமாய் இருக்கிறது.
அங்கயற்கன்னி ஒயின் ஷாப்புக்குள் நுழைந்தான்.
"ஒரு இமைப் பொழுது இருங்கள். உங்களுடன் கதைக்க எங்கள் கன்னித்தமிழ்
பெண்களில் ஒருத்தி விரைவில் வருவாள்" என்றது திரை.
ஆர்வமுடன் காத்திருந்தான்.
"வாங்க காமேஷ், எப்படி இருக்கீங்க?" வார்த்தைகள் திரையில் மின்ன
இவன் உடலில் சூடு ஏறியது.
"நல்லா இருக்கேங்க, உங்க செளகர்யம் எப்படி?" என்றான்.
"காமேஷ், மதுரை பக்கமோ?" என்றாள் கன்னி.
"அட, கண்டு பிடிச்சிட்டீங்களே? ரொம்ப சூட்டிகைதான்!
அதுசரி, உங்க பேரை இன்னும் சொல்லலையே?" என்றான் காமேஷ்.
"என் பெயரா? ம்..ம்...ம். உங்களுக்கு பிடித்தமான பெண்கள் பெயரைச்
சொல்லுங்கள் முதலில்"
"சாயா, நிம்மி, லாவன்யா, பவித்ரா, பாண்டியம்மா"
"கடேசி பேர், முதல் கூட்டத்துடன் ஒத்துப் போகவில்லையே.
தமாஷ் பண்ணுகிறீர்கள், இல்லையா?" என்றாள் திரைக்கன்னி.
இவள் மகா சூட்டிகை.
"சரி, உன்..மன்னிக்க உங்கள் பெயரை இன்னும் சொல்லவில்லையே?"
என்றான் காமேஷ்.
"நீங்கள் என்னை நீ என்றே அழைக்கலாம். பரவாயில்லை.
என் பெயர் கருத்தம்மா" என்றாள் மாயக்கன்னி.
"பொய்.." என்றான். காமேஷ்.
"நீ, விளையாடுகிறாய். உன் உண்மையான பெயர் என்ன?"
"ஏன் நீங்கள் விளையாடும் போது, நான் கூடாதா?
உங்களுக்குப் பிடித்தமான மத்தியமர் பேராகவே சொல்லுகிறேன்.
நான் உஷா"
"உஷா.. நல்ல பெயர்தான். சாயாதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பரவாயில்லை. உஷா, சாயா இரண்டும் ஒரு பொருளின் வெவ்வேறு
அம்சங்கள்தான்" என்றான் காமேஷ்.
"ஆமாம், நான் ரொம்ப பிரகாசமானவள். அதனால்தான் எனக்கு
அப்படியொரு பெயர்" என்றாள் உஷா.
காமேஷின் கையில் ஒரு பியர் ஏறியது. தலையில் லேசாக போதை ஏறியது.
உஷாவுடன் அரை மணி நேரம் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.
திரையில் விருந்தாளிகள் தங்கும் நேரம் முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வந்தது.
உஷாவிடம் பிரியா விடை பெற்றான். தைர்யமாக பிளையிங் கிஸ் கொடுத்தான்.
அவள் அதை பெற்றுக் கொண்டதற்கான சமிக்ஞை செய்தாள்.
"நண்பரே அங்கயற்கன்னி உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
அடுத்த முறை வருவதற்கு அங்கத்தினர் அடையாள எண் வேண்டும்.
அங்கத்தினர் ஆகிறீர்களா?"
ஆம்/இல்லை என்ற கட்டங்கள் தோன்றின திரையில்.
ஆம் எனும் கட்டத்தில் கையிலிருந்த எலியை (மவுஸ்) த் தட்ட,
அங்கத்தினர் ஆவதிலுள்ள சலுகைகளை அட்டவணை இட்டது கணினி.
மாதம் பத்து மார்க்குள் கட்டினால் போதும், வாரத்தில் இருமுறை
அங்கயற்கன்னியில் ஒரு மணி நேரம் பொழுது போக்கலாம்.
விளையாட்டு, தனி இட உரையாடல், ஆட்டம், பாட்டு எது வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம் என்றது நிர்வாகம்.
மேலும்.. என்ற குறியில் தட்ட, அவனது பெயர், உத்தியோகம் அல்லது
மாணவ, மாணவியர் அடையாள எண் (கட்டணம் ஏழு மார்க்காக குறைகிறது)
இது போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டு மறக்காமல் இவனது வங்கி
அட்டையின் எண், அதற்கான ரகசிய எண் இவைகளை வாங்கிக் கொண்டு
சில நொடிகளில் இவனது மனுவை தயாரித்து இவனை அங்கத்தினர்
ஆக்கிவிட்டு வாழ்த்துச் சொன்னது.
காமேஷ் இப்போதெல்லாம், வாரந்தவராமல் அங்கயற்கன்னிக்கு விஜயம்
செய்கிறான். உஷாதான் வேண்டுமென்று தவமிருக்கிறான். எப்போதும்
பாரில் உஷா கிடைப்பதில்லை. இவன் போவதற்கு முன் எவனாவது கொத்திக்
கொண்டு போய்விட்டால், காத்திருக்கிறான். சில பொழுதுகளில் அர்த்த
ராத்திரிவரை காத்திருக்க வேண்டி வந்திருக்கிறது. இவள் பாரில் இருக்கிறாள்
என்றால் இவனது இரத்தவோட்டம் தன்னையறியாமல் கூடுகிறது. அவளுடன்
இருக்கும் பொழுதுகளில் தனி இட வசதி கிடைத்தால் அதை விரும்பி எடுத்துக்
கொள்கிறான்.
அதாவது, தனி அறைக்குள் இவர்கள் இருவரும் அன்னியோன்னியமாக
இருக்கமுடிகிறது, பேசமுடிகிறது. அப்படி இருக்கும் போது இவர்களை
பார் மேனேஜர் கூட கண்கானிக்க முடியாது. குறித்த நேரம் முடிந்தவுடன்
கதவுகள் திறந்து கொள்ளுகின்றன. அதன் பிறகு இவர்களது பேச்சை
கண்காணிக்க முடியும். பெரும்பாலும், அதற்கு அவசியமில்லாமல்
எல்லாவற்றையும் தனி அறையில் பேசிக் கொள்வார்கள்.
எல்லாம் என்றால் எல்லாம்தான்.
ஒரு ஜோக்கில்தான் ஆரம்பித்தான்
இப்படியான பேச்சை.
"உஷா, எனக்கு சுப்பிரமணி என்று ஒரு நண்பன் இருந்தான். கிராமத்தில்
இங்கிலிஷ் படிப்பில் அவ்வளவு அக்கறை கிடையாது. படிக்க யாரும் வரமாட்டார்கள்.
அதனால் படிக்கவரும் பையன்களுக்கு லட்டு, மிக்சர் கொடுத்து படிக்க வைப்பார்கள்.
அப்படிப் படித்தால் எப்படி இங்கிலீஷ் வரும்? இந்த சுப்பிரமணி எப்படியோ
படித்து பாசாகி வெளி நாடு கூட போய் வந்துவிட்டான்.
ம்.., அப்புறம் என்றாள், உஷா.
"அமெரிக்கா போகுமுன்பு கான்சுலேட்டில் மனு படிவம் நிரப்ப வேண்டி இருந்தது.
அதில் "செக்ஸ்" என்று இருந்தது. என்ன எழுதுவது? என ரொம்ப நேரம் யோசித்தான்.
அவன் கொஞ்சம் சங்கோஜியான பேர்வழி.
"கெட்ட சனமாவிலே இருக்கு, இதெல்லாம் கேட்கிறான்" என நினைத்துக் கொண்டான்.
இதச் சொன்னால் அவன் மனைவி நம்பக்கூட மாட்டாள் என நினைத்துக் கொண்டு,
"இரண்டு மாதத்திற்கு ஒரு முறை" என எழுதிக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பார்த்த அமெரிக்க மாது, சிரிப்பை அடக்கிக் கொண்டு,
"ஆணா, பெண்ணா" என எழுதவேண்டும் என்றாள். "கெட்டசாதிப் பசங்க,
என்னை என்னென்னு நினைச்சுட்டாங்க, ஆம்பளைய "கூட முடியுமா" என நினைத்து,
"எப்போதும் பெண்களுடன்தான்"
என எழுதிக் கொடுத்தான்,
என ஜோக்கை சொன்னவுடன்,
குபீர் சரிப்பு என்று திரை சொன்னது. உஷா விழுந்து, விழுந்தது சிரிப்பதாக
காமேஷ் நினைத்துக் கொண்டான்.
உஷா கிடைத்த பிறகு, காமேஷ் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான்.
சாயா போய் உஷா வந்தாள் என நினைத்துக் கொண்டான்.
இவன் நண்பன் பிராபகருக்குத்தான் கணினிக் காதலை நம்பமுடியவில்லை.
"உண்மையிலேயே அவ நம்ம பொண்ணுன்னு நினைக்கிறயா?" என்றான்.
"இல்லாம என்ன, அவ நம்ம பொண்ணுதான். கொஞ்சநாள் பொறு ஆளை நேரா
கூட்டிக்கிட்டு வரேன். பாதிக் கிணறுதானே தாண்டி இருக்கேன்" என்றான் காமேஷ்.
அதன் பிறகு காமேஷ் கொஞ்சம் துருவ ஆரம்பித்தான்.
"உஷா, நீ இவ்வளவு நல்லா தமிழ் பேசறயே, நீ எந்த ஊர்க்காரி?" என்றான்.
புன்னகை - என்று பதில் வந்தது.
"தமிழ்நாடா? இல்லை இலங்கையா, மலேசியாவா? சிங்கப்பூரா? தென் ஆப்பிரிக்காவா?"
எனக் கேட்டான்.
"நீங்களே என் பேச்சிலிருந்து கண்டு பிடித்துக் கொள்ளுங்களேன்.
நான் உங்களை அடையாளம் காணவில்லையா?" என திரும்பிக் கேட்டு விட்டாள்.
இது சவாலாக இருந்தது காமேஷ¤க்கு. இவனுக்கு இதிலெல்லாம் அவ்வளவு சூட்டிகை
காணாது. சரி எங்கேயிருந்து வந்தாலென்ன. தனக்கு சரி நிகராக இருக்கிறாள்.
இவளை எப்பிடியும் மடக்கிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தான்.
"சரி, நீ எந்த ஊர்காரியாக இருந்தால் என்ன? உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு
இருக்கு. நம்ப நிஜமாவே ஒருமுறை சந்திக்க வேண்டும்" என்றான்.
"இப்போது என்ன பொய்யாகவா சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்" என பதில் வந்தது.
"அப்படிச் சொல்லவில்லை. உன்னை நேரில் பார்த்து, முத்தமிட்டு, பல முத்தமிட்டு,
சேர்ந்திட வேண்டும்" என பாரதியை கடன் வாங்கிப் பேசினான்.
"அதுக்குள்ள எவ்வளவு ஆசை!
ஆசைதான் துன்பத்திற்கு காரணம் அப்படின்னு புத்தர் சொல்லராரு"
என்றாள் உஷா.
"அவரு கெடக்காரு. அது சரி, நீ இப்ப எங்கே இருக்கே?" என்றான்.
"பூமியிலே" என்றாள்.
"அழகுதான்! இண்டர்நெட்டு என்ற இணையம் சர்வதேசமானதுதான்.
நீ பூமியில் எங்கிருந்தும் இந்த வேலை பார்க்கலாம், இருந்தாலும் நீ
அருகில் இருந்தால் நேரே சந்திக்க விரும்புகிறேன்" என்றான்.
"இணையத்தில் எல்லோரும், எப்போதும் அருகில்தானே
இருக்கிறோம். நமக்குள் தொலைவு என்பது உண்டோ" என்றாள்.
"அதுவெல்லாம் சரிதான். இருந்தாலும் இது வெறும் மாயை.
விர்ச்சுவல் ரியாலிடி. நான் உன்னை நேரே பார்க்க வேண்டும்,
கொஞ்ச வேண்டும்" என எழுதினான் காமேஷ்.
கொஞ்ச நேரம் திரை சும்மா இருந்தது.
"காமேஷ் அது ரொம்ப முக்கியமா? பார் கேர்ள்ளாக இருப்பது கடினம்.
வேலை சரியாக இருக்கிறது. எனக்கு நேரமே இருப்பதில்லை,
காதல் செய்ய" என்றாள்.
"ப்ளீஸ் அப்படிச் சொல்லாதே, உஷா, நான் உன்னைக் காண வேண்டும்"
என்றான் காமேஷ்.
"போட்டோ ஒன்று கி·ப் பைலாக அனுப்புகிறேனே, போதுமா?" என்றாள்.
"போட்டோ வேண்டாம் நேரே, நேரே" என நூறு முறை எழுதினான்.
"மூச்சு முட்டுகிறது" என்று திரை சொன்னது.
"இப்படி எல்லா கஸ்டமரும் கேட்டால் நான் எங்கே போவது?"
என எழுதினாள் உஷா.
"எல்லாரும் காமேஷ் ஆகுமா? சொல்லு, உஷா, நீ என்னை காதலிக்க
வில்லையா? நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு குழந்தை
பெற்று இல்லறம் நல்லறம் என வாழவேண்டாமா?"
எனச் சொன்னான் காமேஷ்.
மீண்டும் திரையில் மெளனம்.
"என்ன யோசிக்கிறாய்?" என எழுதினான்.
"யோசிக்காமலா கல்யாணம் செய்து கொள்வது?"
என திரை சொன்னது.
"அதுவும் சரிதான், யோசி, யோசி" என எழுதினான் காமேஷ்.
அதற்குள் இவன் நேரம் முடிந்து விட்டது.
பிரபாகர் கேட்டான்,
"என்ன மச்சி, முழு செட் அப்பும் பண்ணிட்டியா?"
"பண்ணின மாதிரிதான் மச்சி. யோசிக்கிறா. சீக்கிரமா பதில் சொல்லி விடுவாள்"
என்றான் நம்பிக்கையுடன்.
"இவள் எந்த ஊரில் இருந்து கொண்டு எழுதுகிறாளோ காமேஷ், மேலும்
அவளுக்கு ரொம்ப டிமாண்டு இருப்பதாகத் தெரிகிறது. அந்த ஒயின் ஷாப்பில்
இவள் ரொம்ப பிரபலம். கடையே இவள வைச்சுத்தான் நடக்குதுன்னு
நெனைக்கிறேன். இவ முதலாளி விட வேண்டுமே. காண்டிராக்டுலே
என்ன கையெழுத்து போட்டிருக்காளோ? ஊரு பேர சொல்லலாமோ என்னவோ?"
என கவலையூட்டினான்.
காமேஷ¤க்கு ரொம்ப கவலையாகப் போய் விட்டது. சாயா போய் உஷா வந்தாள்
என நினைத்திருந்தான். இவளும் கிடைக்காமல் போய் விடுவாளோ என கவலையாக
இருந்தது. இலவு காத்த கிளியாக தான் ஆகி விடக் கூடாது என உறுதி செய்து
கொண்டான். இவள் உலகில் எங்கிருந்தாலும் போய் இவளை கல்யாணம் செய்து
வந்து விட வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டு தூங்கப் போனான்.
காமேஷீக்கு இதுவே பேச்சாகப் போய்விட்டது.
உஷா தட்டிக் கழிப்பதாகப் பட்டது.
"உஷா நீ ரெண்டுல ஒண்ணு சொல்லு, நீ எந்த ஊர்ல இருக்க? இப்ப" என்றான்.
"நானா? அதாவது நான் இருக்கும் இடம், அவ்வளவுதானே? பெர்லின்" என்றாள்.
காமேஷீக்கு அவன் பித்ருக்கள் எல்லாம் செர்ந்து கொண்டு பூமாரி பொழிவது
போல் இருந்தது. பெர்லின், ஆகா பெர்லின். இவள் ஜெர்மனியில் தான் இருக்கிறாள்.
என்ன ஒரு 800 கிலோ மீட்டர். வாரக் கடேசியில் போய் வந்து விடலாம்
என தீர்மானம் செய்து கொண்டான்.
ஊர் தெரிந்து கொண்டாகி விட்டது. இனி டேட் கிடைக்க வேண்டும்.
நல்ல மூகூர்த்த நாளுக்காக காத்திருந்தான்.
இதற்கிடையில் ஒருநாள் வழக்கம் போல் இவனது கலை இலக்கிய மாத
இதழ் வந்தது. கவிதையை எதிர் பார்த்தான். பக்கங்களை வேக, வேகமாப்
புரட்டினான். கவிதை வரவில்லை. ரொம்ப ஏமாற்றமாக இருந்தது.
மற்ற எதையும் படிக்கத் தோன்றவில்லை. வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
மாலையில் உஷாவிடம் கண்டிசனாக கேட்டு விட வேண்டியது என அவளுடன் பேசும்
ஆசையில் அன்று வந்திருந்த மற்ற தபால்களை வாசிக்காமலே போய் விட்டான்.
வாசிக்காமல் கிடந்த பத்தரிக்கைகளில் கணினி சம்மந்தமான பி.சி. வேர்ல்டு ம்
இருந்தது. அதில் சுவாரசியமான செய்தி ஒன்று இருந்தது.
இணையம் என்ற தகவல் வலையில் தூரம் என்பது வெகுவாகக் குறைந்து விட்டது
என்றும். சமீபத்தில் அமெரிக்க பையனும், நியூசிலாந்து பெண்ணும் இணையத்தில்
காதல் கொண்டு இங்கிலாந்தில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் சொன்னது.
அமெரிக்காவில் இருவர் மின் கடிதங்கள் மூலமாக தங்கள் உள்ளக்கிடக்கைகளை
வெளியிட்டு கடேசியில் சந்தித்தார்கள் என்றும். அதன் பின் அந்தப் பெண் வீடு
திரும்பவே இல்லை என்றும். அவள் சென்ற இடத்தில் கொலை செய்யப் பட்டு
விட்டாள் என்றும், போலிஸ் விசாரணையில் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்களில்
சாவு பற்றிய கடிதங்களே அதிகமாக இருந்தது என்றும் தெரிந்தது. அந்த ஆள்
விசாரணையின் போது அவள் விரும்பியே செத்தாள் என்றும் தான் அந்தக்
கொலைக்கு காரணமில்லை என்றும் கூறியிருப்பதாக கட்டுரை சொன்னது.
நம்ம காமேஷ¤க்கு உபயோகமான ஒரு தகவலும் இருந்தது.
அதாவது காமேஷ் படித்திருந்தால்!
நிஜத்திற்கும், மாயைக்கும் இடையில் உள்ள தூரம் வெகுவாகக் குறைந்து
விட்டது என கட்டுரை தொடர்ந்தது. இணையம் இதயங்களை இணைக்கின்ற
பாலமாக இருக்கின்றது என்றும் இணையத்தின் மூலமாக கல்யாணங்கள்
கூட நடந்திருப்பதாகவும் சொல்லிய பின் இணையத்தில் உண்மை எது,
மாயை எது எனத் தெரிந்து கொள்வது முடியாத காரியம் என கட்டுரை கூறியது.
மிகத் திறமை வாய்ந்த கணினி மென்பொருள் ஒன்று சமீபத்தில் இணையத்தில்
நுழைந்திருப்பதாகவும் அது விரும்பிய வண்ணம் ஆண், பெண் வேடம் போட்டுக்
கொள்ளுகிறது என்றும், அதன் வேலையே ஆண்களையும், பெண்களையும்
"ஜொள்ளுக் கொட்ட" வைப்பதே என்றும் கட்டுரை எழுதி இருந்தது.
இம்மென் பொருளின் தரவுவங்கியில் பல மில்லியன் தகவல்கள் சேர்த்து
வைக்கப்பட்டிருப்பதால் அது நினைத்த மாத்திரத்தில் இந்தியனாக, ஆப்பிரிக்கனாக,
இங்கிலீஷ்காரனாக வேஷம் போட முடியும் என்றும், மனித மனோ நிலைகள்
பற்றிய தரவுகள் அதில் ஜாஸ்தியாக இருப்பதால் மெல்லிய மனித உணர்வுகளுக்குக்
கூட அதனால் பதில் உரைக்க முடிகிறது என்றும், வல்லுனர்களே உண்மை எது,
மாயை எது எனத் தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பதாகவும் எழுதி
உஷா....ர்! உஷா....ர்!
என முடித்து இருந்தது.
புதிய பார்வை
அது ஒரு மிக, மிக நெடிய பயணமாக இருந்தது. மலையாகக் குவித்து வைத்திருந்த ஆப்பிள் பழங்கள் இப்போது இரசமாகி அடைபட்டிருக்கும்.
அந்த மலை! பூக்களை தன் காலில்அர்ச்சித்து மகிழும் மரங்கள் நிரம்பிய மலை! வாங்கக் குடம் நிரைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் போல் தாங்கும் திறனறியாமல் கனி குவித்து கிளை ஒடிந்து விரைவி நிற்கும் மரங்கள் சூழ்ந்தமலை! அம்மலை கூட தொலைவு பட்டுவிட்டது.
பரிமளம் பிறந்து ஒரு வருடம்தான் ஆகிறது. கொழுக்கு, மொழுக்கென்றுசுவிஸ் நாட்டுச் சாக்கெலெட்டுப் போல் கருமரக் கலரில் கடித்துசாப்பிடத் தூண்டும் அழகுடன். அவள் அண்ணன் இரட்டைச் சுழிஇரவிச்சந்திரன். அவன் பாடு தாங்காமல்த்தான் பயணப்பட்டுவிட்டேனோ? சொல்ல முடியாது.
பயணங்களில் சுகமுமுண்டு, சோகமுமுண்டு. பயணிக்கும் போது விடைபெறும் அழுகையைத் தாங்கிச் சுமக்க வேண்டும். இது சுமை.பயணிக்கும் போது உடலும், மனதும் இலகுவாகி விடுகிறது. மனது பறந்து கொண்டேதான் இருக்கிறது. புதிய பகுதியைப் பார்க்கும் ஆனந்தம், புதிய பிரதேசம், புதிய மக்கள். பயண மனது எப்போதும் இலகுமாகி, புதிதாய் உள்ளது. அந்தக் கண்ணில் மஞ்சக் காமாலை கிடையாது. மங்கிய தன்மை கூடக் கிடையாது. புதிய கண்கள், புதிய உலகம். இது பயணம் தரும் சுகம். தங்கிப் பழகி விட்டால் பிரிவு உபசாரம். மீண்டும் ஒரு சோகம்.
பிரிதலற்ற வாழ்வும், பிரிதலற்ற பயணமும் உண்டோ? பிரிவு சுமை. பயணம் இலகு. பயணத்தில் நடத்தப் படுகிறோம். தங்கிவிடும் போது நமது பாரம் நம் கைக்கு வந்து விடுகிறது. நிலைத்திருத்தல் சுமை. நிலையாமை இலகு.
எத்தனை இரவுகள் பயணப் பட்டோம் என்பது மறந்து விட்டது. பகல்கள் அற்ற பயணமது. நீண்ட குகையில் நெடி துயிலும் பாம்பின் கனவு போல் அது ஒரு குகைப் பயணம். குகையெனும் வெளி முன்னும்,பின்னும் நீண்டு பரவியுள்ளது. அதிக நேரம் அப்படியே பயணப் படும்போது அது குகை வெளியா? இல்லை மன வெளியா? இல்லை புறவெளியா?என்பது புரிவதேயில்லை. புறமும், அகமும் கூட ஓன்றின் நீட்சிதானே,மற்றது. அகத்தில் ஒளி இல்லையெனில் புறச் சொல்லின் பயனென்ன? ஒரு குகையில் வளரும் சுடர்தானே உயிர். அச்சுடரை நோக்கிய பயணம் முதலில் அறியாமை என்ற இருளில்தானே நடக்கிறது. அணியின்றிப் பேசினாலும் உள் நோக்கிய பயணம் இருள் வெளியில்தானே. இருள் வெளியில் பால் ஒளி தோன்றும் பொழுதுகள் உண்டு. அகக்கண் கொண்டு புறத் தோற்றம் காணும் போது வெண் புகை முட்டத்தில் கரிய வடிவினனாய் அமர்ந்திருப்பது கிருஷ்ணனானகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது நானாகவும் இருக்கக் கூடும். தெய்வங்களின் எண்ணற்ற முகங்களும்,கைகளும் உள்ளுள் ஓடும் நதியின் ஓட்டப் படுகைகள்தானே.
பட்டப் பகலின் நெட்டைக் கனவாய்த்தான் சில சமயம் உலக உறவின் தொப்புள் கொடி புலப்படுகிறது. தொப்புள் கொடிகள் அறுக்கப் படுகின்றன.அறுந்து விடுவதால் உறவுகள் அறுந்து விடுவதில்லை. என்னில் வந்து, என்னில் கலந்து, என்னை விட்டு இப்போது தூரம் போய் விட்டாய். எனினும், தொப்புள் கொடியின் ஒரு முனை இன்னும் துளிர்ப்புடன்தான்இருக்கிறது, ஒட்டிக் கொள்ளத் தோதுவாய்.
எத்தனை நாட்கள் பயணமென்பது கணக்கிட்டால்த் தான் தெரியும்.இருள் வெளியில் மின்னும், எப்போதாவது நட்சத்திரங்கள்! அல்பாசென்டாரிஸ் அல்லது அகஸ்த்திய மண்டலமாவென்பது விவரம் தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். என்னைப் பொறுத்தவரை அது ஒரு மிக நீண்ட பயணம்.
இலக்குகள் மறந்து போன ஒரு பொழுதில் நாங்கள் ஒரு புதிய உலகில் மிதந்து கொண்டிருந்தோம். முன், பின் இப்படியொரு காட்சியைக் கண்டதில்லை. மிக பிரம்மாண்டமான கான்கிரீட்டுச் சுருளொன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இத்தனை பெரிய சுருளைத் தொங்க வைக்கும் ஆதாரம் கண்ணில் படவில்லை. தூளியின் கயிறு எங்கே? இம்மண்டலத்தில் புவியீர்ப்பு விசை என்பது இல்லையோ? உயிர்த்திரியின் மூல வடிவம் போல் சுருண்ட பொருளாவதென்? மூல அறிவின் நீளப் பாம்பின் சுருளோ? குண்டலினி சக்தியின் விஸ்வரூப வெளிப்பாடோ? உள்ளுக்குள் புதியது காணும் அச்சம். அறியாமையின் மெல்லிய நடுக்கம் என்னுள் பரவி நின்றது.
இந்த உலகில் மக்கள் உள்ளனரா? மெதுவாகப் போன போது ஒரு வீடு கண்ணில் பட்டது போலிருந்தது. நெருங்கும் தைர்யமும் கூட என்னை விட்டுப் போன போது முனியக்காதான் முன்னே போனாள். அவளுக்கு எப்போதும் அசாத்திய தைர்யமுண்டு. அவள் இருப்பதே ஒரு தைர்யம்தான். அச்சத்தின் ஊடான பார்வையில் பறக்கும் பறவைகள் கண்டேன். இவ்வுலகில் பறவைகள் உண்டு. ஆக,அப்போதுதான் உணர்ந்தேன் நான் சுவாசிக்கக் கூடிய ஒரு உலகில்வந்து நிற்பது. முனியக்காவுடன் போன போது தெருக்கள் வந்தன. அம்மக்கள் தமிழும் பேசினர். இது என்னை மிகவும் ஆச்சர்யப் பட வைத்தது.
எப்படி இவ்வுலக மக்கள்என் மொழி பேசுகின்றனர்? என் அகத்தின் நீட்சிதானோ இப்புறவுலகம்? புராதண இந்தியாவில் சப்த ரிஷிகள் முக்காலமும் உணர்ந்து பனை ஓலைகளில் தனி மனித விதி செய்து வைத்தனர். நாடி வருவோர்க்கு அது கண்ணாடிபோல் வாழ்வு நிலை காட்டுவதால் அது "நாடி" என்றே பெயர் பெற்றுப்போனது. என் மனதைப் படம் பிடித்து நாடி சொன்ன நபர்கள் உண்டு. அது குரளி வித்தையா இல்லை இன்னும் புரியாத அறிவாவென்று என்னுள் நான் உட்புகுமுன். அவன் சொன்னான், நான் ஆங்கிலக் கும்பினியர்களுடன் கிடா நாடு சென்று, அங்கு நடந்த உள்ளாட்டுப்போரில் மரித்துப் போனேன் என!
சரித்திரம் படித்தறியாத எனக்கு மலேசியக் கிடா நாடுதான் சோழன் வெற்றி கொண்ட கடாரம் என்று தெரியாது. சோழ மன்னரின் சைதன்யம் மொழியையும், சந்ததியினரையும் விட்டுச் சென்றிருக்கும். அங்குள்ள மக்கள் தமிழில் பேசியது ஆச்சர்யத்தைத் தந்தது என்றால் எனக்கு கும்பினியர் சரித்திரம் தெரிந்த அளவிற்கு தென் தமிழ் நாட்டுச்சரித்திரம் தெரியவில்லை என்று பொருள். பிரபஞ்சம் முழுவதும் தமிழ் பரவிய காலமுண்டோ? ஆதிக் குரங்கு கூட திராவிடக் குரங்காக இருந்திருக்கலாம். அந்த கிரகத்தில் நான் பேசிய மொழி புரிந்தது, வாயை அசைக்காமலே! பண்டைய லெமூரியா? கடல் கொண்ட தென்னாட்டிற்கு மூழ்கி முத்தெடுக்க வந்து விட்டேனா?
ஒரு வீட்டில் தங்க அனுமதித்தார்கள். இவ்வுலகில் மாட கோபுரங்கள் தெரியவில்லை. அந்த இராட்சதச் சுருளைத் தவிர. மக்கள் குடிசை போன்ற எளிய வீடுகளில் வசிக்கின்றனர். குளிக்கும் அறையில் பாதிச் சுவர் இருக்கவில்லை. விழும் தண்ணீரில் ஆவிச் சூடு பரக்கவில்லை. மெல்லிய குளிர். நீர் பிரிந்தது போன்ற உணர்வு. குடம், குடமாக.
முன்பொருமுறை இப்படிப் பயணப்படும் போது ஸ்ரீலங்காவின் அநுதாரபுரம் சென்றேன். விமானத்தில் பயணிப்பதை விட தனியாகப் பறந்து விடுவது சுகம். தட்டாம் பூச்சி போல் மெதுவாக வயல்வெளியில் பறக்கலாம்.இந்த முற்றிய நெல் கதிர் நடு வயிற்றில் பட்டும், படாமலும் கிச்சு,கிச்சு முட்டும் சுகம் விமானத்தில் பறந்தால் நிச்சியம் கிடைக்காது.வயல்களுக்கு நடுவே பயணப் பாதை. இருமருங்கிலும் மரங்கள்.பூத்துக் குலுங்கும் மரங்கள். அதன் வசந்தம் மெல்லிதாக காற்றில் பரவி நின்றது. கோட்டை கொத்தளங்களைத் தாண்டி கோயிலுக்குள் போன போது நீண்ட துயிலில் இருந்தான் சித்தார்த்த கெளதமன்.
நீங்கள் இப்படி அடிக்கடி பயணப் பட்டால் உறவு பிரிந்து விடுமெனபால ஜோஸ்யன் சொன்னான். இதற்கு ஜோஸ்யமெதற்கு பகுத்தறிவு போதாதோ? பிரிந்தே விட்டது.
எத்தனை பயணங்கள். எத்தனை துயர்கள். சுகமும், சோகமும் தாங்கும் பயணங்கள். சுகம் நோக்கிய பயணத்தின் மிஞ்சிய எச்சம் சோகம்தான். நான் பயணப் பட்டுவந்த போதெல்லாம் யாராவது போயிருப்பார்கள். ஒரு முறை அக்கா. ஒரு முறை நாய். ஒரு முறை மனைவி. ஒரு முறை சித்தப்பா. சித்தப்பா தேசாந்திரம் போய் விட்டதாக சித்தி நம்புகிறாள். என் மனைவி சுற்றுலாப் போய் விட்டதாக நானும் நம்புகிறேன். பயணங்கள் முடிவதேயில்லை. நேற்றுவரை கூட இருந்த கிருஷ்ணன் போய் விட்டான் என்று சொல்கிறார்கள். நான் அவனை கடைசியாகப் பார்த்த போது அவன் சீரங்கம் போவதாய்ச் சொன்னான்.
புதிய உலகம் தரும் ஆச்சர்யத்திற்கும், வாய்ப்புகளுக்கும் பின்னால்அடி மண் கரை படுவது புரிவதேயில்லை. பயணப் பட்டு முடியும்போது எந்த மண்ணும் சொந்தமில்லை. உள்ள மண்ணும் புரிவதில்லை. அந்த வீட்டில் தூங்கி முழித்த போது புவியீர்ப்பு அற்ற நிலையில் இருந்தேன் போலும். கோமணம் கட்டிக் கொண்டு மாடு மேய்த்த குமரன் தோப்பு எங்கே? கோமளா சிணிங்கிச் சிணிங்கி அரவணைத்துத் தூங்கும் பள்ளியறை எங்கே? செர்ர்ரி மலர்கள் கொட்டித் தீர்க்கும் கொல்லைப் புறங்கள் எங்கே? மேகம் கொஞ்சும் மலை முகட்டுக்குடிசை எங்கே? எங்கே நான் இருக்கிறேன்?
புவியீர்ப்பு என்பது சுத்தமாய்ப் போய் விட்டதோ? புவியீர்ப்பு என்பது கல்யாணம் கார்த்திகை என்று மாமி சொன்னாள்.மனித உயிரிக்கு வேலி அவசியமென்று சொன்னாள். காணிக்கு வேலி. கல்யாணமான வேணிக்கும் வேலி. கால்க்கட்டுப் போட்ட ஆணுக்கும் வேலி என்றாள். வேலியற்ற சமூகத்தில் தாலிக்கு அவசியமில்லை என்றாள். வேலி இருக்கும் போது ஒரு வெளி சொந்தமாகிறது. சொந்தமற்ற ஒன்றைச் சொந்தப் படுத்துவது இந்த வேலி ஒன்றுதான். ஒன்றுமில்லா மனதை உள்ளுக்குள் போடுகிறது உடலெனும் வேலி. உடலென்ற ஒன்றிற்கு பெயரிட்டு தக்கவைக்கிறது சமூகமெனும் வேலி. அப்புறம் கல்வி வேலி, கல்யாண வேலி, சாதி வேலி, வர்க்க வேலி என வேலிக்குள் அடங்கும் மனித வேள்வி! ஆனாலும் வேலி என்பது மனித உயிரிக்குத் தேவையான ஒன்றாகவேஉள்ளது. வேலிக்குள் இருக்கும் போது உயிர்க்கொடி இருக்கமாகஇருக்கிறது. உடலெனும் வேலிக்குள் உள்ள உறுப்புகள் கூட மாற்று சிகிச்சையில் மருவ மறுக்கின்றன. மூலாதாரத்தில் எங்கோ இருக்கும்பதிவுகள், ஒன்றுக்கொன்று வேலி அமைத்து, நீ நீதான் என, நான் நான்தான் என.......ஓடும் பாதையில் ஒண்ணு அடித்து தனது காணியைச் சொந்தம்கொண்டாடும் நாய்க்கும், மனிதனுக்கும் அதிக வித்தியாசமில்லை, வேலிக் கணக்கில் பார்த்தால்! வேலிக்குள் அடங்கச் சொல்லும் பருப்பொருள் உடல்.விட்டு விடுதலையாகி நிற்கச் சொல்லும் மாயாவி மனது.
பூமியெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து களைத்து விட்டதால் புதியதாய்க் கண்டு சொல்ல புதிய வெளி நோக்கி சோர்வராப் பயணத்தில் எப்போதும் நான்.வெளி உள்ளும் உண்டு, வெளியும் உண்டு. வெளியுள் நானா இல்லை என்னுள் வெளியாவெனக் கண்டு சொல்ல முடியாது போலும் ஒன்றில் ஒன்றாய், ஒன்றை மருவி மற்றொன்றாய்...... நான் மீண்டும் திரும்பும் போது ஊர் என்பது எதுவாக இருக்கும்? நான் காலூன்றி நிற்பதாகக் கூட சில சமயம் தெரிவதில்லை. காலூன்றி நிற்க வேண்டாம் என்று சொல்வது நடை பயிலும் வித்தை அறிந்ததால்த்தானே? என் மூதாதையர் காலம், காலமாக ஒரேஇடத்தில் நிற்க வில்லையா? புத்தன் காலத்தில் விழுந்த விதை இன்று செம்மரங்களாய் நெடிதுயர்ந்து நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் விதைகள் பயணப் பட வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் விழுந்த விதை காற்றில் மிதக்கவோ அல்லது நீரில் பயணப்பட்டோதானே ஆக வேண்டியுள்ளது.
இப்படி ஆசைப் பட்டுதான் சிலோனில், மலேசியாவில், பர்மாவில் குடி புகுந்து தோட்டத் தொழிலாளர்களாய் பரம்பரை அடிமையாகிப் போன வம்ச கதைகள் உண்டு. உள்ளாட்டுப் போரை சாக்குக் காட்டி வெளி நாட்டில் வந்து செட்டிலாகும் சனங்களை என்ன சொல்ல? போரை முடித்து வைக்காமல் நீட்டித்து, நீட்டித்து இரண்டு தலைமுறை வந்தாயிற்று. புடலங்காய்க்கும் கத்தரிக்காய்க்கும் முடிச்சு போட்டாற் போல் இனம் தெரியாசனமொன்று இங்கும், அங்குமென அலைந்து கொண்டிருக்கிறது. அலையில் கரையும், கரை மண் போல, என் வேர்கள் என்னை விட்டுவிலகி ஓட, வேர்கள் அற்ற நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றன என் உயிர்ச் சுருள்கள். என்னை இற்று ஈர்க்கச் செய்யும் புவியீர்ப்புகள்எவை?
"காபி பிளாஸ்க்கிலே இருக்கு. தூங்கி முழிச்சதும் மறக்காம குடிங்க.புதுசா காப்பி போட்டு பாலை வீணாக்க வேணாம். புரியுதா?விடிந்த பின்னும் என்ன தூக்கமோ" என்று கேட்கும் இக்குரல் யாருக்குச் சொந்தம்?கனவின் மிச்ச சொச்சமாக நடப்பு உள்ளதா இல்லை நடப்பின் பதிவுதான் கனவின் ஆட்சியா? நான் வேற்று கிரகத்தில் இருந்துகொண்டு மானுடக் கனவு காண்கிறேனா? இல்லை மானுட உலகில் இருந்து கொண்டு வேற்று கிரகத்துக் கனவு செய்கிறேனா? இல்லை வேறொருவர் கனவின் படிமப் பொருளாக நானா? நான் மனிதன்காணும் கனவா இல்லை கனவு காணும் மனிதனா?
கணினிகள்உருவாக்கிய நகல் நிஜக் காட்சிப் பொருளா நான்? இந்த "நான்" என்பதே காணும் தோற்றப் பிழையோ?
வேலியின் சுகம் நாடி அந்தரத்தில் தொங்கும் கொடிகள்!
இந்தியா டுடே நவம்பர் 1,2000 பக்கம்: 44-46
காவி மலரென்னும் காண்தொறும் - பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும்
அவ்வவை எல்லாம் பிரானுருவே
சுடரில் நிழலாகி போச்சு
உன் நினைவு முகம்
சுடர் தாங்கும் அகலாய்
என்றும் நிலைச்சு போச்சு
கரு முடியோ வெண் பஞ்சு
மேகமாச்சு
கண்மணியை மறத்தலும்
பிரசவ வைராக்கியம் ஆச்சு